பழம்பெரும் பாண்டியர்களின் வரலாற்றை பேசும் பகுதி(தமிழ் மண்ணின் மூத்த குடிமக்கள் பாண்டியர்கள், பழம்பெருமை வாய்ந்த அவர்களின் சிறப்பையும், பெருமைகளையும் தெள்ள, தெளிவாய் எடுத்துரைக்க இருக்கிறது இந்தப் பகுதி. பல்வேறு பாண்டியர்களின் வரலாற்றை கால வாரியாக இத்தொடரில் நீங்கள் அறியலாம்)பாண்டியர்கள், மதுரையை ஏன் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர் என்பதை பார்ப்போம்.பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை. இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தின் (லெமூரியா கண்டத்தின்) நடுவே பழம் பாண்டியர்களின் கொற்கை அமைந்திருந்தது. குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டியர்கள் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது. கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது. கடல் தங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக மீனை வைத்துக் கொண்டனர். இரண்டு மீன்களின் இருபுறமும் உள்ள கண்கள் தெரிய வேண்டுமென்பதற்காக செங்குத்தாக நிற்பது போல் அமைத்தனர். எதிலும் தாங்கள் உறுதியாக நிற்பவர்கள் என்பதை காட்ட இச்சின்னத்தை தேர்ந்தெடுத்தனர்.கொற்கையை ஆண்ட சடவர்மன் வீரபாண்டியன், இலங்கையில் போர்தொடுத்து வென்று, திரிகோணமலை பாறையில் மீன்கொடியை பொறித்தான். பிற்காலத்தில் டச்சுக்காரர்கள், அந்த பாறையை பெயர்த்தெடுத்து, தூய பெரடரிக் கோட்டை சுவர் மீது வைத்தனர். பாண்டிய மன்னர்கள் வாணிப செலாவணிக்காக காசுகளை அச்சடித்தனர். பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.கொற்கை துறைமுகமும் அந்த கடல்கோளால் சீரழிந்தது. கொற்கையை ஆண்ட கடைசி மன்னர் முடத்திருமாறன்.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.பழைய காயலுக்கு துறைமுகம் இடம்பெயர்ந்தது. இங்கும் கடல்கோளால் 4 கி.மீ., தூரத்தை கடல்கொண்டது.இங்கும் இப்படி அடிக்கடி கடல் கோள்கள் பல ஏற்பட்டு பின் இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று.பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்ற குறிப்பு இராமாயணத்தில் உள்ளது.
No comments:
Post a Comment